dimanche 12 novembre 2023

தீபாவளி

 பொங்கல் வருசமெண்டால் புதிசு புதிசாக 

எங்களின்ரை விழாவோ இல்லையிது ஆற்ரையோ 

எண்டு முழங்கி இடியோசைக் கருத்தோடை 

துந்துமி முழுங்க துடிப்பாய் சிலபேர்கள்

வந்து பொருதுவார் வசைபாடியே நகைப்பார்

திண்டதெல்லாம் செமிக்க சிரிக்கக் கதையளப்பர்

வருகிறது தீபாவளி வசைபாட நிற்போர்க்கு  

வரிசையாய் பதிலிறுக்க ஆயுத்தப் படுத்துங்கோ....


புராணக் கதைக்குப் புதுவர்த்தம் கண்டவராய்

மகுடாசுரன் தமிழன் மண்ணில் பிறந்தவனை

மொழியால் எம்மினத்தோனை மெய்யாலெம் நிறத்தோனை

எழிலாய் தமிழர்களை எற்றமுற வைத்தோனை

எழியோன் எனஇழித்து  இகழும் இந்நாளதனை

தமிழர்நாம் கொண்டாடல் சரிதானோ எனக்கேட்டு

திசைமாறிப் போவதாய் செப்பித் துலைப்பார்கள்

வசைபாடி எங்களையே  வம்பிற்கிழுப் பார்கள்..


இன்னும் சிலபேர் இதையும் விடப்புதிசாய்

சொல்லித் தொலைப்பார் சுவையாகவே இருக்கும்

இராவணனெம் முப்பாட்டன் இராமனவன் கொண்டதனை

தீபாவளி யென்று சிறப்பான கற்பனையில்

ஆரோ சென்னாராம் அதுவுண்மை என்றுரைத்து

கூறிச் சிலபேர் கொக்கரித்து நிற்பார்கள்;

ஆரும் அவரவற்ரை எண்ணத்தில் தோன்றியதை

சீராய் கதையளந்தால் சிக்குவதா அதனுள்ளே..


புமிதனைச் சுருட்டிப் பொங்குங் கடலுகுள்

ஆரேனும் ஒழித்தல் சாத்தியமோ என்று

புராணக் கதைக்குள் புதிசாய்ப் பகுத்தறிவை

புகுத்தி ஆராய்ந்து பொய்யென்று நகைப்பார்கள்

பொய்யென்று தெரிந்தால் பொதிவுண்மை என்னவென்று

எண்ணித் தொலைக்காமல் இருப்பதுதான் பகுத்தறிவோ.???

இலக்கியத்தின் இயம்புவகை ஏதென் றறியீரோ

அதற்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள் தேடீரோ???.


ஆதித் தமிழனின் அற்புதப் பண்புகளில்

ஊறிக் கிடக்கிறது இயற்கை வழிபாடு

ஆதவனைத் துதித்து  அவனுக்கு நன்றிசொல

தைப்பொங்கல் பொங்கித் தனியாய் விழாஎடுத்தோம்

தீயதற்கு நன்றிசொல்ல தீபங்களை யேற்றி

தீமையாம் இருளைத் திக்கெட்டும் ஓட்டுவதாய்

வாணங்களும் விட்டு வண்ண ஒளிகாட்டி

ஊரதிர வெடிபோட்டு ஓட்டுவதே தீபாவளி

அத்தோடு............

தீமை அழுக்காறு தீங்குவிளை ஆணவமும் 

பஞ்சமா பாதகங்கள் பயமின்றிச் செய்தற்கு

உந்துதலாய் உள்மனத்தில் ஒழித்திருக்கும் தீமையதும்

மாயையாய் எம்மனதுள் மகுடா சுரனெனவே 

தேங்கி யிருக்கும் தேவையிலா மனவிருளை

ஆங்ககற்ற அருளொளியை ஏற்றுவதா யுணர

ஏற்றுவதே தீபம் என்றறிய அதையேந்தி (வரிசையாய்)

காட்டி மகிழ்கின்ற திருநாளே தீபாவளி.


மனதடியில் மண்டி மாயையினால் மறைந்து

அழுக்கிருளாய் இருக்கும் அனைத்துவகைத் தீமைகளை

தீபங்களை யேற்றி திக்கெட்டும் இருளகற்றி

வாழ்வு சிறப்புறவே வகைசெய்யும் திருநாளாய்க்

கூடிக் கொண்டாடி குணத்தில்கொள் பண்பதனை

ஆண்டாண்டு தோறும் அழகாக்கிப் புதுப்பித்து

மீண்டும் நற்பண்புகளை வேண்டுமென கேட்பதால்

யாண்டு மிவ்விழா எம்மவர்க்குப் பெருமைவிழா!

எனவே......

அனைவர்க்கும் எனதினிய தீபாவளி வாழ்த்துகள்!..

Aucun commentaire:

Enregistrer un commentaire