dimanche 5 juin 2011



  





"பரமனை மதித்திடாப் பங்கையாசனன்
ஒருதலைகிள்ளியே யொழிந்த வானவர்
குருதியுமகந்தையும  கொண்டு தண்டமும்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். "

முன்னொருகாலத்தில் மகாமேருமலையின் கண்ணே பிரம்மதேவரும் விஸ்ணு மூர்த்தியும் இருந்தபோது எண்ணற்ற தேவர்களும், முனிவர்களும் ஒருங்குகூடி அவர்களை வணங்கியும், மூர்த்திகளில் முதல்வராக விளங்கும் ஆதி நடு அந்தமில்லாத மகாதேவரும்  எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் மகாபிரபுவும்  எல்லாவற்றுக்கும் மேலாகி ஒழிவில்லாப் புவனங்கள் தோறுமுள்ள உயிர்கட்கு உயிராகவும் இருப்பவர் யாவர்? என்பதனை விரைந்து நீவிர் கூறவேண்டுமென வேண்டி நின்றார்கள்.

இவ்வாறாக அவர்கள் வேண்டி நிற்றலும் பிரம்மா மாயையெனும் வலையில் அகப்பட்டு நின்றதால் நானே பிரம்மம்! நானே யாவற்றுக்கும் தலையாயவன்!! என்றுகூறினார். அவ்வேளையில் திருமாலும் தன்னிடம் பொருந்திய மயக்கத்தால் (மால் மயக்கம்) உன்னைப்பெற்ற தந்தையும் நானே, ஆதலால் நானே தலைமைப்பாடு உடையவனாவேன், நானே பிரம்மம் என்றார். இவ்வாறாக இருவரும் தாமே பிரம்மமெனக்கூறி அளவில்லாதகாலம் யாவரும் அஞ்சத்தக்க நிலையில் மாறுபட்டு தர்க்கிக்கும் வேளை அங்கு நின்ற முனிவர்களும் தேவர்களும் இது எம்மால் ஏற்பட்டதொன்றாகி விட்டதென்றெண்ணி ஒருவரும் அவ்விடத்து நில்லாது நீங்கி சென்றுவிட்டனர்.

அதன்பின்னரும் இருவரும் சண்டை செய்துநின்றதால் வேதமும் பிரணவமும் வேற்று வேற்றுருக்கொண்டு வந்து நீவிர் வாதம் செய்வதொழிக, யாவர்க்கும் பிரம்மபிதாவாகும் சிவபெருமானே உண்மையான பரம் பொருளென்று கூறின.  முன்னரே அவர்கள் ஓதியுணர்ந்த வேதவாக்கையும் பிரணவவாக்கையும் பொருட்படுத்தாது மேலும் கொடிய வௌவ்விய பூசலைச் செய்ய அவர்கள் முரண்பாட்டை நீக்குமாறு எம்பெருமான் கருணை கொண்டார்.

ஆதியுமந்தமுமில்லாத சிவபெருமான் நின்மலஒளியாக ஆகாய மத்தியில் வந்துதோன்ற, பிரமா விஸ்ணு இருவரும் இன்னமும் மாயப்பிணிப்பிலிருந்து நீங்காதவர்களாகி, இவ்வொளி சிவபெருமானெனக் கருதாமல் இவ்வொளி யாதோவென்று மயங்கினார்கள். இவர்களது இயல்பையறிந்த சிவபெருமான் சோதியின் வடிவாகி திருக்கைலாயத்திலே உமாதேவியாரோடு கலந்து வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைக் காண்பிக்க திருமால் மனம் தெளியப்பெற்று விரைந்தெளுந்து வணங்கித் துதித்து நின்றார்.

மாயையின் பிணிப்பு ஒருசிறிதும் நீங்கபெறாத பிரமா, தலைவராகிய சிவபெருமானே எழுந்தருளிவந்தாரென திருமாலைப்போல அன்போடு எழுந்து வணங்கப்பெறாதவராய் தனது நீண்ட உச்சிச்சிரத்தின் கன்னதாய தீயதொருவாயினால் மேலாகிய சிவபெருமானை இகழ்வாராயினார்.

பிரமதேவனின் சிவ நிந்தையால் ஏற்பட்ட பாவத்தைத் தொலைக்கவும் ஏனைய தேவர்களின் செருக்கை ஒழிக்கவும் முனிவர்களின் இறுமாப்பைப் போக்கவும் மிகுந்த பெரும் கருணையாலே சிவபெருமான் தனது திருவுள்ளத்தின்கண்ணே வைரவக்கடவுளை மகிழ்ச்சியோடு உண்டாக்கியருளினார் என்கிறது கந்தப்புராணம்.

"நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற்றோளும்.           

முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
மைக்கினக் கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்."      

மேற்கூறிய உக்கிரவடிவத்தைக்கொண்டு அங்கு தோன்றிய வைரவ மூர்த்தியை எம்பெருமான் நோக்கி பின்வருவனவற்றை வகுத்துக்கூறுகின்றார். " பிரம்ம தேவனது உச்சித் தலை எம்மை இகழ்ச்சி செய்தது ஆனதனால் அச்சிரசை விரைந்து கிள்ளி கையிலேந்தி அப்பிரமனது உயிரை மீண்டும் கொடுத்து எம்மைப் புகழ்ந்து வணங்கியிருக்கின்ற முனிவர்கள் தேவர்கள் இருக்கின்ற நகரங்கள் தோறும் போவாயாக, அங்கே அவர்களுடைய புலாலுடலிலுள்ள இரத்தத்தை பிட்சையாக ஏற்பாயாக, அதனால் இறப்பவர்களுக்கு அவர்களது உயிரை மீட்டும் கொடுப்பாயாக, அவர்கள் தேடிக்கொண்ட செருக்கையும் நீக்குவாயாக,
முன்னரே உனக்காகவுள்ள அண்டமுகட்டிற் பொருந்திய பைரவ புவனத்திலிருந்து மக்கட்பரப்பாகிய கூட்டங்கள் முழுவதையும் தேவர்கள் கூட்டத்தையும் யாண்டும் துன்பமுறாத வகையில் காக்கக் கடவை"யென நல்லருளைச்செய்து எம்பெருமான் நின்மலமாகிய சோதியுள் மறைந்தருளினார்.

இந் நிகழ்ச்சிகளெல்லாவற்றையும் விஸ்ணுபிரான் பார்த்து,  இவ்விடத்தில் இனியும் நிற்பது சரியல்ல எனநினைத்து முக்கண்ணராகிய சிவபெருமானை மனதில் தியானித்துக்கொண்டு விரைவாக அவ்விடம் விட்டு தனது வைகுந்த உலகுக்குப்போனார்.

அங்கே உக்கிர தோற்றத்தோடு கிளர்ந்தெளுகின்ற வைரவக்கடவுள் பிரமாவினுடைய நிறம் கிளர்கின்ற உச்சித் தலையை தனது நகத்தினாலே கிள்ளி ஏந்த அதனாலேற்பட்ட இரத்த வெள்ளம் பூமியைச் சூழ்ந்தது. பிரம்மாவும் வீழ்ந்து இறந்தார்.  இரத்தவெள்ளம் பிரவாகித்து விரைவாக உலகத்தை மூடி பெரியமேருமலையைச்சூழ தனது நெற்றிக்கண்ணின் அக்கினியால் அவற்றை ஒருசேர வற்றச்செய்து பிரம்ம தேவனின் அரிய உயிரையும் வழங்கினார்.

பிரம்மதேவர் நித்திரை விட்டெழுபவரைப்போல முன்போல நல்லறிவு கூடுதலும் வைரவக் கடவுளது மலரடிகளில் வீழ்ந்து வணங்கி பின்வருமாறு வேண்டுதல் செய்வாராயினார்.

"பெருமானே நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானுக்கு யான் செய்த குற்றங்கள் பலவுள அதனால் இன்று இப் பெரும்பழிக்கு ஆளாயினேன். இனிக் கோபம் சிறிதும் திருவுளத்தில் கொள்ளாதொழிக. நின்னுடைய அருளினாலே எனது பழைய நல்லறிவு வரப்பெற்றேன். சிவநிந்தனை செய்ததாகிய எனது கீழ்மையுடைய உச்சித்தலையானது, உயர்ந்த சூலப் படையானது தங்கள் திருக்கரத்தில் இருப்பது போல தங்கள் திருக்கரத்திலிருந்து பெருமை பெறுவதாக." என வேண்டுதல் செய்ய அவ்வாறேயாகுக என்று அருள் செய்து மேருமலையை விட்டு நீங்கிச்சென்றர்ர்.

வைரவக்கடவுள் அவ்வாறு செல்லும்போது காலவேகன், கனல்முகன், சோமகன், ஆலகாலன், அதிபலன் முதலான மிகக்கூடிய பூதசேனைகளை உண்டாக்கினார்.  இவ்வாறான பூதசேனைகளோடு முனிவர்கள் இருக்கின்ற காடுகள்தோறும், தேவர்கள் இருக்கின்ற விண்ணுலகுதோறும் சென்று இரத்தப்பிச்சையேற்று அவர்கள் இழந்த அரிய உயிர்களையும் மீட்டுக்கொடுத்து, அவர்களுடைய உள்ளங்களையும் தூய்மைசெய்து அவ்விடம்விட்டு நீங்கி இன்னமும் மயக்கத்தில் நீங்காத திருமாலுறைகின்ற வைகுந்தலோகம் செல்வாராயினார்.

முன்னராகவே,செல்லுகின்ற பூதசேனைகளை வைகுந்தத்தைக் காவல் செய்கின்றவனான விடுவசேனன் எதிர்கொண்டு யுத்தம்செய்ய மேலோராகிய வைரவக் கடவுள் அவனது உடலைச்சூலத்தால் குத்தி ஏந்தியவாறே விரைவாக உள்ளே சென்றருளினார்.  இவர் வரவைக்கண்ட திருமால், தேவியாரிருவருடனும் எதிர்கொண்டு பெருமானே!  இங்கு எளுந்தருளியது என்னகாரியமோவென்று கேட்டார்.

அதற்கு வைரவக் கடவுள் நாம் உமது இரத்தப்பிச்சை ஏற்கும்படியே வந்தோம், உமது நெற்றியிலிருந்து இரத்தத்தைத் தருமாறுகேட்க நல்லதூம!  என்று தனது நெற்றியில் தனது நகத்தினால் கீறி இரத்தப்
பிச்சையிட்டார். பல ஆண்டுகள் சென்றும் வைரவக்கடவுளது பிட்சாபாத்திரம் நிறையவுமில்லை  விஸ்ணு மயங்கி வீழ்ந்தார். அப்போது அவரது தேவியார்கள் வைரவக் கடவுளது கால்களில் வீழ்ந்து வேண்டுதல் செய்ய அஞ்சல்மின்! அஞ்சல்மின்!! என்று அருளி திருமாலினது மயக்கத்தைநீக்கி உய்ந்தெளும் வண்ணம்செய்து, அவ்விடத்தைவிட்டு வைரவக்கடவுள் நீங்கிச்செல்ல, அவரைப்பின்தொடர்ந்து சென்ற திருமால் தனது வாயில் காவலனான விடுவசேனனது உயிரைத்தந்துதவுமாறு வேண்டுதல்செய்ய, அவ்வாறே விடுவசேனனது உயிரையும் மீட்டுக்கொடுத்து கருணை புரிந்தார்.

இறுதியாக வைரவக் கடவுள் ஒப்பற்ற உக்கிர வடிவத்தோடு பூதகணங்கள் சூழ அண்டமுகட்டிலுள்ள தனது புவனத்தின் கண் இருந்து பல அண்டங்களையும் பாதுகாத்திருப்பாராயினார்.
                              வைரவக் கடவுள் திருவடி போற்றி! போற்றி!!

பைரவர் திருக் கோலம்

பைரவர் துதி 
விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகங்கை,  
தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம் 
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்  
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
பைரவர் தோத்திரம்
சாயாத சூலதண்டாயுதனே பச்சைச் சட்டையனே வேயார் விண்ணோர்தொழும் மேனியனே யென்மிடிதவிர்ப்பாய் வாயாரவுன்னைத் துதிப்போர்க்கு வேண்டும்வரம்தருவாய் தாயாகிய அப்பனே காழியாபதுத் தாரணனே!
சிவன் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் முக்கியமானது சிவபெருமான் வீரத்திருவிளையாடல்களை நடாத்தும்போது பைரவரின் திருக்கோலத்திலேயே காட்சிதந்ததாக புராணங்கள் கூறும். பைரவருக்கு இரண்டு பெயர்களுண்டு. ஆணவங்கொண்டு அனியாயம் செய்பவர்களை அழிப்பதனால் அமர்தகர் என்றும், தன்பக்தர்கள் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளை, பாபங்களை நீக்குவதால் பாப ப~ணர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பைரவர் பாம்பை நூலாகக்கொண்டும் தலையில் சந்திரனை தரித்தும், சூலாயுதம், மழு, பாசம், தண்டம் என்பன ஏந்தியும் நாயை வாகனமாகக்கொண்டும் அருட்காட்சி தருகிறார்.
பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராதலால் சனிபகவானால் ஏற்படும் தீங்குகள், துன்பங்கள் நீங்கி நலம்பெறலாம் அத்துடன் கெட்ட பேய் பிசாசு ஆதிக்கத்திலிருந்து விடுபட பைரவரைத் வணங்கி விரதம் இயற்றலாம்.
பைரவருக்கு உகந்தநாட்களாக ஒவ்வொருமாதமும்வரும் தேய்பிறையை நோக்கிய அஸ்டமி தினம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திகையில் வரும் தேய்பிறை நோக்கிய அஸ்டமி தினம் பைரவருக்குகந்த மிகவிசேட தினமாகக் கூறப்படுகிறது.
காசியிலே மிகமுக்கிய தெய்வமாக பைரவசுவாமி போற்றப்படுகின்றார் காசிசெல்லும் அடியார்கள் கங்கையில் நீராடி வணங்கியபின் காசியிலுள்ள காலபைரவரை வணங்காது திரும்புவாராகில் அவர்தம் யாத்திரை முழுமையடைந்ததாகக் கருதப்படமாட்டாது எனப்பெரியோர் கூறுவார்கள்.
எனவே சிவபெருமானின் இன்னொரு வடிவாக நின்று அருள்தரும் பைரவப்பெருமானை துதித்து விரதமிருந்து நற்பேறு பெறுவோமாக.