dimanche 8 mai 2011

செம்பியன்பற்று பாலையடிவைரவர் கோவில்

எங்குதான் சென்றாலும் எப்படித்தான் வாழ்ந்தாலும் அவரவர் எண்ணத்தில் நின்று நிலைத்து நினைவிலே உலாவருவதென்றால் அது அவரவர் பிறந்த ஊரும் சிறுபராயத்து நினைவுகளும் என்று சொல்லலாம்அந்தவகையில் செம்பியன்பற்றில் உள்ள கோவில்களும் அவ்ஊரில் வாழ்ந்த, வாழும் மக்களும் என்றைக்குமே; செம்பியன்பற்றில் பிறந்த மக்களின் மனதில் நின்று நிலைப்பதொன்றும் அதிசயமல்ல. ஆனால் அது அதிசயம்தான்.
நாற்பது ஆண்டு காலத்துக்கு முன்பு அங்கே வாழ்ந்த எம்கிராம மக்கள் அனைவரது வீடுகளும்; குடிசைகளும் மண்வீடுகளுமாகவேயிருந்தன. ஆனால் எமது கிராமக் கோவில்களில் பெரும்பான்மையானவை கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களாகவேயிருந்தன . அக்கோவில்களில் பூசைகள் திருவிழாக்களென்று தமது வசதிக்கப்பாற்சென்று நடாத்துவார்கள். ஒரே ஆரவாரமாகவிருக்கும். அவ்வளவு தூரம் கடவுள்மீது நம்பிக்கையும், கோவில்களுடனான ஈடுபாடும் எம்மிடம் இருந்ததுஇன்னும் இருக்கிறது. இனியும் இருக்கும்.

அக்காலங்களில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட கந்தப்புராணத்தை முழுநூலையும் மனப்பாடம் செய்து கோவில்களிலே பாடக்கூடியவர்களும், அப்பாடல்களுக்கான விளக்கவுரைகளை சர்வசாதாரணமாவே விளக்கக்கூடியவர்களாகவும் இருந்த கல்விச் சான்றோர்கள் வாழ்ந்தகாலம் ஞாபகத்தில் வருகிறது. யாழ் குடாநாட்டில் வடமராட்சி கிழக்கில் மருதங்கேணி தொடக்கம் குடத்தனை வரையும் ஒரேபண்பாட்டைக்கொண்ட மக்களாகவும், பெரும்பான்மையானவர்கள் உறவுமுறைகொண்டவர்களாகவும் ஒற்றுமையானவர்களாகவும் வாழ்ந்துவந்தோம். வாழ்கிறோம் வாழ்வோம்.

குடாரப்பு, நாகர்கோவில் கிராமத்தில் கந்தப்புராணத்துக்கு சிறப்புமிக்க உரைகளைச் செம்மையாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய பல சான்றோர்கள் வாழ்ந்தார்கள். அதிலுள்ள பாடல்களை ராக முறைக்கமையப் பாடக்கூடிய பலர் வாழ்ந்தார்கள். இவர்களில் பலர் பல்லவர்காலப் பாடல்களையொத்த தரமான தமிழ் இலக்கண விதிகளுக்கமைய பாடல்களை எழுதியிருந்தார்கள், அவையாவும் காதுவழிப்பாடல்களாக சிலகாலம் வாழ்ந்து, பாதுகாப்பாரின்றி காற்றோடு கலந்துவிட்டதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. அப்பெரியோர்களை எண்ணும்போதெல்லாம் எனக்கு
"ம் என்னும்முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின்
பெரும்காளமேகம் பிளாய்!"
என்று காளமேகப்புலவர் புலமைச் செருக்கோடு பாடியபாடல்தான் ஞாபகத்தில்வரும். (அதிமதுரகவிராயர் உன்பெயரென்ன ? உனக்கு பாடத்தெரியுமா என்று காளமேகத்தைக்கேட்டபோது அவர் பாடியது) அவ்வளவு  பெரும்புலமை கொண்டவர்கள்
அப் பெரியோர்களின் பெறுமதி அக்காலத்தில் எமக்குத்தெரிந்திருக்கவில்லையே என்று கவலை கொள்வதில்கூட ஒரு திருப்தி தெரிகிறது. காரணம் இப்போதாவது நினைத்தோமே எனறுதான். செம்பியன்பற்றுக் கிராமத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் எமது சிறுபராயக் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அந்தவகையில் செம்பியன்பற்று பாலையடிவைரவர் கோவில் எம் வாழ்வோடு ஒட்டிக்கொண்ட கோவிலாகவும், மூலமூர்த்தியாகிய வைரவப் பெருமான் எமக்கு என்றும் துணையிருக்கும் காவல் தெய்வமாகவும் மனபலம், தனபலம், வாழ்க்கைப்பலம் இவை அனைத்தும் தரும் தெய்வமாகவும் துணைநிற்பது எமக்குக் கிடைத்த பெரும்பாக்கியமாகும்.

அதனால் வைரவப் பெருமானை மனத்திருத்தி, அவர்பாதம் தொழுது, அவர் அருள்பெற்று உய்வோமாக! பாலையடிவைரவர் திருப்பாதம் போற்றி! போற்றி!