dimanche 3 mai 2015

சித்திரைப் பௌர்ணமி

இன்று சித்திரைப் பௌர்ணமி. இந்நாள் எமக்கு உயிர்தந்து, உடல்தந்து, ஊட்டிவளர்த்து ஆளாக்கிய அம்மாவை நினைத்து மனமுருகி, விரதமிருந்து பிதிர்க்கடன் நிறைவேற்றும் நன்னாளாகும்.
நம்முன்னோர் சைவசமயத்தை ஒரு உயர்ந்த சமூகக் கொள்கையாக மாற்றி வாழ்ந்தார்கள், என்பதை நினைக்க அப்பெரும்பெருமை மனதைப் பெருமைகொள்ள வைக்கிறது. சிலகாலங்களின்முன் அன்னிய பழக்கவழக்கங்களில் தாய்க்கென ஒருநாளை நிர்ணயித்து, அந்நாளில் தாய்மாரைப் பெருமைப்படுத்தும் வழக்கத்தை உருவாக்கி, கொண்டாடி வருகிறார்கள். அதில் உள்ள சிறப்புக்கருதி நாம் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாமக்களும் அந்நாளைக் கொண்டாடி வருகிறார்கள். தாய்மார் உயிருடன் இருக்கும்போது கொண்டாடுவது தாய்மாரை நிஜத்திலேயே சந்தோசப்படுத்தும் ஒருநாளாகிறது. அந்த வகையில் இப்பழக்கம் எவருடையது என்பதற்கப்பால் சிறப்புடையது என்பதே முக்கியத்தும் பெறுகிறது. அம்மா உயிருடன் இருக்கும்போது வாழ்த்துவதற்கோ, மகிழ்விப்பதற்கோ நாள்குறிக்கத் தேவையில்லை எனினும், அந்நாள் சிறப்பாகத்தான் இருக்கிறது. தாய்மார் இறந்தபின்பும் அவர்களை நினைத்துப் போற்றுவதென்பது இன்னும் மேலான சிறப்புடையது. நன்றிமறவாத் தன்மைகொண்டது. இந்நாள் இறந்துபோன எல்லாத் தாய்மார்களுக்குமாக எல்லாப்பிள்ளைகளும் நினைவு கூரும் நன்னாளாக இருக்க, அவரவர் தாய்மார்கள் இறந்துபோன திதிகளுக்கமைய அவர்களை நினைத்து விரதமிருந்து பிரார்த்திக்கும் வழக்கமும் இன்றும் நாம்கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாறு தாய்மாரை நினைத்து மூன்று தினங்களைக் கொண்டாடி வருகிறோம் என்பது பெருமைக்குரியது. தமிழர்கள் பரந்து விரிந்த மனதுக்குச் சொந்தக்காரர்களாகவே வாழ்ந்தார்கள் என்பதை ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடல்தந்த புலவன் கணியன் பூங்குன்றன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றது பெருமைக்குரியது. எங்கள் விழாக்களையும் பேணுவோம், அடுத்தவர் விழாக்களும் சிறப்புடையதெனில் அவற்றையும் கொண்டாடுவோம். ”அம்மாவின் அன்பு பௌணமிபோல் வெளிப்படையான வெளிச்சமானதால் சித்திரையில் பௌர்ணமியில் வருவது சிறப்புடையதே.