mercredi 18 juillet 2012

தந்தையர்க்கோர் நாள் ஆடிஅமாவாசை.

சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேருகின்ற நாளே அமாவாசையென அழைக்கின்றோம்.  பிதிர்க்காரகன் எனச்சூரியனையும், மாதுர்க்காரகன் எனச்சந்திரனையும், அழைப்பது சூரியனைத் தந்தையாகவும், சந்திரனை  அன்னையாகவும் உருவகப்படுத்துவதாலாகும். அந்தவகையில் எல்லா அமாவாசைகளிலும்பார்க்க ஆடிமாதம் வருகின்ற ஆடிஅமாவாசை சிறப்புடையதாகும்.  தந்தையரை இழந்தவர்கள் தத்தமது தந்தையரை நினைத்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நல்லநாள் இந்நாளாகும்.  இந்நாள் சைவமக்களால் பெருமெடுப்பில் கொண்டாடப் படுவதே  இந்நாளின் சிறப்பை எடுத்தியம்பி நிற்கிறது.

எமது முன்னேற்றத்தில் தந்தையரின் செயல்கள் அமாவாசைபோல எமக்குத் தெரியாமலே ஒழிந்திருக்கும். அக்கறைநிறைந்த கண்டிப்பின் தன்மையது.  "தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருக்கச்செயல்” எனும் வள்ளுவன் வாக்கு; வள்ளுவரின் தந்தை எப்படி இருந்திருப்பார் என்பதை எடுத்தியம்புவதாகக்கூடப் பார்க்கலாம்.  தந்தையின் அன்பு, பாசம், அக்கறை என்பன  அன்னையின் அன்புபோல; தெளிந்த, இதமான, குளிர்ந்த, அரவணைப்புடனான அன்புபோல வெளியே தெரிவதில்லை, அதனால்தான் அன்னைக்குச் சிரார்த்ததினம் சித்திரைப் பௌர்ணமியில் வருவதுகூடப் பொருத்தமாக இருக்கிறது.

இந்நாளில் யாழ்ப்பாணமக்கள் ஆதிகாலத்திலிருந்தே கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடி தத்தமது தந்தையரை நினைந்து விரதமிருந்து  பிதிர்க்கடன் செலுத்துவது வளக்கமாகும். அதுபோலவே திருகோணமலையில் திருக்கோணேஸ்வரத்திலும்,  மட்டக்கிளப்பில் மாமாங்கப் பிள்ளையார் கோவிலிலும் தீர்த்தமாடி பிதிர்க்கடன் செலுத்துவர்.
அங்குசெல்ல முடியாதவர்கள் தத்தமது வீடுகளிலோ அல்லது அருகிலுள்ள ஆலயங்களிலோ  தத்தமது தந்தையர்க்காக விரதமிருந்து  பிதிர்க்கடன் செலுத்துவர்.

இவ்வாறான உயர்ந்த , பெருமைகொள்ளக்கூடிய சைவசமயப்பழக்க வழக்கங்களை  அழிந்துவிடாமல் பாதுகாத்து, அடுத்த சந்தியினருக்கும் எடுத்துச்செல்லவேண்டிய கடமை ஒவ்வொரு சைவசமத்தவனுக்கும் முன்னால்லுள்ள பெரும்பொறுப்பாகும்.