mardi 28 novembre 2023

தமிழர்களும் சமயமும்..

தமிழர்களின் கடவுள் வழிபாடு எப்போது தோன்றியது என்பதை அறிவதன்முன் எவ்வாறு உருவானது என்பது பற்றி அறிந்து கொள்ளல் சிறப்பாகும். மனிதன் மொழி பேசத் தொடங்கு முன்பே இற்கையை வணங்கி வழிபடத் தொடங்கிவிட்டான்; மற்றைய உயிர்கள்போலவே முதல் தோன்றிய மனிதரகள் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து கண்ணில் கண்டதையெல்லாம் பசியை நீக்க உண்டான்.  அதேவேளை இயற்கையின் சீற்றங்களில் சிக்கி என்ன செய்வதென்றறியாதபோது அவனைப் பயம் ஆட்கொண்டது. அதன்விளைவாக எவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் அவனை பயம் கொள்ளச் செய்ததோ அவற்றை அவன் வணங்கத் தொடங்கினான். அவை அமைதி கொள்ளும் போதும் தனக்குப் பயனாக அமையும்போதும்தன்வேண்டுதல் பலித்ததாக நம்பிக்கொண்டான். அப்பயிற்சி அவனுக்கு தன் மீதான நம்பிக்கையை வளர்த்தது. ஒன்றைச் சந்தேகமின்றி நம்பிச் செய்யப்படும் செயல்கள் சித்தியாகும் என்பது தற்கால உளவியல் முடிவாகும்.

அதனால் பண்டைய மனிதன் இயற்கை தமக்களித்த வரங்களென நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை வழிபடத் தொடங்கினான்.மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப அவன் பயிர் செய்து உடைஉடுத்தி வீடுசெய்து வாழலானான். அத்தோடு தன்முனைப்பாக அவனது ஐம்பொறிகளின் செயல்கள் அவன் மூளைக்குள் எண்ணற்ற தரவுகளை அள்ளிக்கொடுப்பதை உரமாகக்கொண்டு சிந்திக்கத் தொடங்கினான். அச்சிந்தனைகளின் வளர்ச்சியின் உச்சமாக சிந்துவெளி நாகரிகத்தை அடைந்தான். 

சிந்து வெளிநாகரீகம் என்பது இற்றைக்கு கி.மு 2500க்கும்  கி.மு 3000க்கும் இடைப்பட்ட காலத்தில்   மிகுந்த நாகரிகத்துடன் வாழ்ந்த ஒரு மக்கள்கூட்டத்துக்குச் சொந்தமான நாகரிகம் ஆகும். இந்நாகரிகம் இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு சதியால் எதுவுமில்லாமல் அழிந்து போய்விட்டது.

அதன் எச்சங்களை அவதானித்த தொல் பொருளாய்வாளர்கள் யோன் மார்சல் போன்றோர்  அவ்விடங்களில் அகழ்வாராட்சி செய்துமொகன்சதாரோ கரப்பா ஆகிய இருநகரங்களைக் கண்டுபிடித்தனர். அந்நகரங்களில் வாழ்ந்தமக்களின் பண்பாடு கலாச்சாரம் வழிபாடு போன்வற்றை அங்கு கிடைத்த தொல்பொருட்களை ஆதாரமாகக்கொண்டு ஆய்வை விரிவு படுத்தினர். அதனடிப்படையில்  அங்கு வாழ்ந்த மக்கள் சிவலிங்க வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்றும் அங்குள்ள சில ஊர்களின் பெயர்கள் தமிழுக்குச் சொந்தமானதெனவும் நிரூபித்தனர். சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் வெகுகாலம் பணியாற்றிவரும் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா 

(Asko Parpola), ஹன்டர் (Hunter) போன்றோர் அது தமிழர்கள் நாகரிகம் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் தமிழர்களின் வழிபாடு சைவ வழிபாடு என்பது நீரூபணமாகியது. சிந்துவெளி நாகரீகத்தின்சிறப்பான நகரங்களான மொகன்சதாரோ கரப்பா ஆகியன தற்போது பாகிஶ்தானில் இருக்கிறது. அங்கே கண்டுபிடிக்கப்பட்டகரப்பா எனும் நகரத்திலிருந்து கன்னியா குமரிவரை தமிழர்கள்தான் வாழ்ந்தார்களென இவ் வாராட்சியாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

சிந்து வெளி நாகரீகம் உச்சமடைந்திருந்த  அதே சம  சமகாலத்தில் தென் இந்தியாவிலும்  ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், கீழடி என்று இன்றைய தமிழகம் வரையிலும், தமிழர் நாகரிகம் உச்சத்தில்தான் இருந்தது. இவ்வாறிருக்கையில் ஆரியர்கள் என்று கூறப்படும் இனத்தவர் வருகை வடஇந்தியாவில் ஆரம்பித்தது. இவ்வாறான தொல் பொருள் ஆய்வூடான வரலாறு இடையில் அறுந்துபோனது. அதனால்  இலக்கிய வரலாற்றினூடாக தமீழர்களின் சமயத்தை தொடரவேண்டியதாயிற்று. 

தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையில் தேடுகையில் தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் இருந்தே தொடங்கக்கூடியதாக தமிழர் சமயம் காணப்படுகிறது. தொல்காப்பியத்தில் தமிழர்கள் வாழ்ந்த ஐவகை நிலங்களுக்கும் தனித் தனிக் கடவுள் வழிபாடுகள் இருந்தமைக்கான சான்றாக

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 

என்றபாடல்மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. இங்கு குறிஞ்சிநிலத் தெய்வமாக முருகன் வழிபடப்பட்டிருக்கிறார்.அத்துடன் அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு சிறப்பிடம் பெற்றது என்பதைக் "கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்ற சூத்திரப் பகுதியால் புரிந்துகொள்ளலாம்; அத்தோடு அந்நூலில்  சைவ தத்துவக் கொள்கைளான ஊழ்வினை நிலையாமை ஆகியன பற்றிய விடயங்கள் காணப்படுகிறது. அத்தோடு  சிந்து வெளிக்கால சிவவணக்கத்தின் லிங்க வழிபாடு சங்க காலத்துக்கிடையில் படிப்படியாக வளர்ச்சியில் மாற்றம்கண்டு உருவ அமைப்புகளையும் பெற்று சிவனெனும் வழிபாட்டுக்கு வளர்ச்சிபெற்றிருந்தது; 

அதற்கான சான்றுகளை சங்ககாலத்தின் பல பாடல்களில் காணலாம்; ஆதிரையான்,ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.  அத்துடன் எட்டுத் தொகை நூல்களுள்ஐங்குறுநூறில்உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்றும் , கலித் தொகையில் "எயில் எய்யப் பிறந்த எரிபோல"ன்றும் அகநானூறில் செவ்வான் அன்ன மேனி என்றும், "நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்" என்றும், புறநானூில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன்,  கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்றும்  கடவுள் வாழ்த்துப் பாடல்களில்   சிவபெருமான்    குறிக்கப் பெறுகிறார்.. அத்துடன் திருமுருகாற்றுப்படை முருகப் பெருமானுக்கான முழுநூலாகிக் காட்சிதருகிறது. 

இவ்வாறு சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சிபெருமானின் உருவமும் பல அருட்செயல்களும் குறிப்பிடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.அதனை அடுத்து சங்கம் மருவிய கால நூலாகக் கருதப்படும் திருக்குறள் ஒருசமயக்கொள்கையைக் கொண்ட நூலல்ல எனக் கூறப்பட்டாலும் ."ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற தொடர் கடவுள் உண்மையைப் புலப்படுத்தும். கடவுள் வாழ்த்தில் அமைந்த 10 பாடல்களும் தெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும். "இருள்சேர் இருவினை""பிறவிப் பெருங்கடல்"  "எண்குணத்தான்"என்பது இறைவன் எண்ணற்ற - அளவில்லாத குணங்களை உடையவன் என்பதை உணர்த்தும். கடவுளுக்குரிய சொல்லாகிய 'இறை' "தெய்வம்"என்ற சொற்கள் திருக்குறளில் கையாளப் பெற்றிருப்பது கடவுட் கொள்கையை நிலைநாட்டும். அதுபோலப் "பற்றுக பற்றற்றான் பற்றினை" "மெய்யுணர்வு" போன்ற வரிப் பாவனைகள்   சமயம் சம்பந்தமானதே

இவ்வாறன தொடர்ச்சியில் சங்கம் மருவியகாலத்திலும் தமிழர்களின் பிரதான தெய்வமாக சிவனும் அத்தோடு திருமாலும் இணைந்துகொண்ட காலத்தை அடுத்து வடக்கிலிருந்து வந்த ஆரியர்களின் சமயவழிபாடுகள் தமிழரிடை காலூன்றத் தொடங்கின. விசாக முனிவரும் அவர் சீடர்களும் சமணசமயத்ததை தமிழரிடை பரப்பினர் அதேபோல அசோகரின் சமய தூதர்களும் பௌத்த மதத்தைப் பரப்பினர். எனினும்  சிலப்பதிகாரம்  குன்றக் குரவையில் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகவேளின் வழிபாடும் ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலத்தெய்வமான திருமால் வழிபாடும். இந்திரவிழவூரெடுத்த காதையில் மருதநிலத் தெய்வமான இந்திரன் வழிபாடும் கானல்வரியில் நெய்தல் நிலத் தெய்வமான வருணன் வழிபாடும், வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடும் கூறப் பெற்றுள்ளன. அத்தோடு  சிவபெருமானைப் "பிறவாயாக்கைப் பெரியோன்" என்றும்,  "நுதல்விழி நாட்டத்து இறைவன்"என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. காரைக்காலம்மையார் பாடல்களும் சிவவழிபாட்டையே சிறப்பித்துநிற்கிறது. 

இவ்வாறிருக்கையில் ஆரிய மதங்களிலும் தமிழ்மக்கள் இணைந்த காலகட்டத்தில் சமயங்களுக்கிடையான பூசல்கள் தோன்றி பல பிரச்சனைகளை மக்களும் அச்சமயம் சார்ந்தவர்களும் அனுபவிக்கவேண்டியேற்பட்டதால்  ஆதிசங்கரர் எனும் துறவி எல்லாச் சமயங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டை உருவாக்கினார். அதனடிப்படையில் கி.பி 8ம் நூற்றாண்டளவில்சமயங்களிடையான பூசல்களை   தீர்ப்பதற்காக சைவம் வைணவம் சாக்தம்  காணபத்தியம் கௌமாரம் சௌரம் ஆகிய ஆறுசமயங்களை ஒன்றிணைத்தார். அத்தோடு ஒவ்வொரு சமய முழுமுதற் கடவுளரும் குடும்ப உறவுகள்போல இணைக்கப்பட்டனர். 

சைவமும் சாக்தமும் இணைந்து சிவமும் சக்தியுமாகி காணபத்தியக் கணபதியும் கொமாரக்கடவுள் முருகனும் அவர்களுக்குப் பிள்ளைகளாகி வைணவக் கடவுளான திருமால் சிவனின் மைத்துனனாகி  சண்மதங்கள் என்ற கூட்டு உருவானது. அதுவே இன்னும் பல கிராமியத் தெய்வங்களையும் உள்ளீர்த்து இந்து சமயமாகி தற்போது தமிழரிடையான சமயமாகியது.  அவ்வாறு ஒரே குடும்பமாகக் காட்டி அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பலபுராணக்கதைகள் புனையப்பட்டு  ஒரேசமயக் கொள்கையாக்கப்பட்டது.  அதனால் ஒரே கோவிலில் பலசமயத் தெய்வங்களை வைத்து வழிபடும் வழக்கத்து மக்கள் பழக்கப்பட்டார்கள்.அதற்கு ஆதரவாக சமய குரவர்களும் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் எனப்பாடி மக்களை ஒன்று படுத்தினர்.இவ்வாறு ஆரியமதங்களை இணைத்துக்கொண்டு ஒற்றுமையாக வழிபாடுகளை மக்கள் நடாத்துவதற்கான வழியை உருவாக்கிய யாரிடமும்  சுயநலம்மிக்க தவறான வழிநடத்தல் தன்மையோ அல்லது யாரையும் ஏமாற்றி தம்மதத்துள் இழுக்கும் செயல்களோ இருக்கவில்லை. 

ஆனால் பின்அவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவோரில் சிலர் ஏமாற்றுகள் சுயநலநோக்குகள் கொண்டியங்குவதால் பலபிரச்சனைகள் உருவாகியுள்ளது. ஆரியர் என்பவர்களையே பார்ப்பனர் என இந்தியாவில் அழைக்கிறார்கள்.: அவர்கள் கோவில்களில் பூசை நடாத்துபவர்களாக இருக்கிறார்கள்.

அதுபோலவே ஏற்கனவே தமிழர் சமயங்களின் பூசையை நடத்தியவர்கள் ஆரியர்கள் அல்ல. அவர்களை அந்தணர் என்றும் அழைப்பர்; இவர்களை இலங்கையில் கண்டுகொள்ளலாம்; இவ்வாறே தமிழர் சமய வரலாறு காணப்படுகிறது. 

-பொன்னையா. இராசா-

 

சுரன் போர்.

நானெனும் பெருவாணவம்தனைச் சூரனாய்ச் சிரமேந்தினான்.
ஊனமேயது கேடுதானென ஓதுஞானம் அறிந்திடான்
வானமேயது எல்லையேயென வகுத்துவாட்சி புரிவதாய்
கூனலாய் மனங்கோணலாய்க் கொடுங்கோலனாய் சூரன்மாறினான்;
-அவன் -
ஆணவம்தனை கூறதாக்கவே வேலவன் வேலேந்தியே
ஞானமொன்றிய வேலினால்சூர னாணவம் வதமானதே..
பாரிலேயுள பக்தரும் தமதாணவம் தனைநீக்கவே
பாடமாயொரு போர்நடந்தது பார்த்துநாம் திருந்தவே..
-பொன்னையா இராசா..



சூரன் தலை காட்டல் நல்லூர்

முருகுபதி நல்லூரி னருகிலொரு வீதிவழி
இருபுயமும் எழுமலையாய் இகழுவகை சிரசோடு
இடியெனவே வெடியோசை மனதினிடை திகிலாக
அதனிடையே முழவதிர கொடியதொரு பெருவுருவில்
அசுரரது படைசூழ நடுவிலொரு மலைபோல
கருவிழிகள் கனலாகி எரிலைபோ லனலுமிழ
பெருவுலக அழிவெனவே மனதிலொரு பயமேற
பெருவுருவ சூரனாம் தலைகாட்டிச் சென்றான்.


dimanche 12 novembre 2023

தீபாவளி

 பொங்கல் வருசமெண்டால் புதிசு புதிசாக 

எங்களின்ரை விழாவோ இல்லையிது ஆற்ரையோ 

எண்டு முழங்கி இடியோசைக் கருத்தோடை 

துந்துமி முழுங்க துடிப்பாய் சிலபேர்கள்

வந்து பொருதுவார் வசைபாடியே நகைப்பார்

திண்டதெல்லாம் செமிக்க சிரிக்கக் கதையளப்பர்

வருகிறது தீபாவளி வசைபாட நிற்போர்க்கு  

வரிசையாய் பதிலிறுக்க ஆயுத்தப் படுத்துங்கோ....


புராணக் கதைக்குப் புதுவர்த்தம் கண்டவராய்

மகுடாசுரன் தமிழன் மண்ணில் பிறந்தவனை

மொழியால் எம்மினத்தோனை மெய்யாலெம் நிறத்தோனை

எழிலாய் தமிழர்களை எற்றமுற வைத்தோனை

எழியோன் எனஇழித்து  இகழும் இந்நாளதனை

தமிழர்நாம் கொண்டாடல் சரிதானோ எனக்கேட்டு

திசைமாறிப் போவதாய் செப்பித் துலைப்பார்கள்

வசைபாடி எங்களையே  வம்பிற்கிழுப் பார்கள்..


இன்னும் சிலபேர் இதையும் விடப்புதிசாய்

சொல்லித் தொலைப்பார் சுவையாகவே இருக்கும்

இராவணனெம் முப்பாட்டன் இராமனவன் கொண்டதனை

தீபாவளி யென்று சிறப்பான கற்பனையில்

ஆரோ சென்னாராம் அதுவுண்மை என்றுரைத்து

கூறிச் சிலபேர் கொக்கரித்து நிற்பார்கள்;

ஆரும் அவரவற்ரை எண்ணத்தில் தோன்றியதை

சீராய் கதையளந்தால் சிக்குவதா அதனுள்ளே..


புமிதனைச் சுருட்டிப் பொங்குங் கடலுகுள்

ஆரேனும் ஒழித்தல் சாத்தியமோ என்று

புராணக் கதைக்குள் புதிசாய்ப் பகுத்தறிவை

புகுத்தி ஆராய்ந்து பொய்யென்று நகைப்பார்கள்

பொய்யென்று தெரிந்தால் பொதிவுண்மை என்னவென்று

எண்ணித் தொலைக்காமல் இருப்பதுதான் பகுத்தறிவோ.???

இலக்கியத்தின் இயம்புவகை ஏதென் றறியீரோ

அதற்குள் மறைந்திருக்கும் அர்த்தங்கள் தேடீரோ???.


ஆதித் தமிழனின் அற்புதப் பண்புகளில்

ஊறிக் கிடக்கிறது இயற்கை வழிபாடு

ஆதவனைத் துதித்து  அவனுக்கு நன்றிசொல

தைப்பொங்கல் பொங்கித் தனியாய் விழாஎடுத்தோம்

தீயதற்கு நன்றிசொல்ல தீபங்களை யேற்றி

தீமையாம் இருளைத் திக்கெட்டும் ஓட்டுவதாய்

வாணங்களும் விட்டு வண்ண ஒளிகாட்டி

ஊரதிர வெடிபோட்டு ஓட்டுவதே தீபாவளி

அத்தோடு............

தீமை அழுக்காறு தீங்குவிளை ஆணவமும் 

பஞ்சமா பாதகங்கள் பயமின்றிச் செய்தற்கு

உந்துதலாய் உள்மனத்தில் ஒழித்திருக்கும் தீமையதும்

மாயையாய் எம்மனதுள் மகுடா சுரனெனவே 

தேங்கி யிருக்கும் தேவையிலா மனவிருளை

ஆங்ககற்ற அருளொளியை ஏற்றுவதா யுணர

ஏற்றுவதே தீபம் என்றறிய அதையேந்தி (வரிசையாய்)

காட்டி மகிழ்கின்ற திருநாளே தீபாவளி.


மனதடியில் மண்டி மாயையினால் மறைந்து

அழுக்கிருளாய் இருக்கும் அனைத்துவகைத் தீமைகளை

தீபங்களை யேற்றி திக்கெட்டும் இருளகற்றி

வாழ்வு சிறப்புறவே வகைசெய்யும் திருநாளாய்க்

கூடிக் கொண்டாடி குணத்தில்கொள் பண்பதனை

ஆண்டாண்டு தோறும் அழகாக்கிப் புதுப்பித்து

மீண்டும் நற்பண்புகளை வேண்டுமென கேட்பதால்

யாண்டு மிவ்விழா எம்மவர்க்குப் பெருமைவிழா!

எனவே......

அனைவர்க்கும் எனதினிய தீபாவளி வாழ்த்துகள்!..

dimanche 12 avril 2020

பைரவர் அவதாரம் எப்போது நிகழ்ந்தது?

(இணையத்தில் பெற்றது.)
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போக வேண்டாம்; துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
பைரவர் அவதாரம் எப்போது நிகழ்ந்தது?
""""""""""""""""''''''''''''''''''''''"""'"""''''''''''''''''''''''''''''''''''''''''''""""
அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் எப்போதும் சிவ சிந்தனையில் இருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை.
தேவர்களையும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களை துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத் புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான். ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார். அவரால் தங்களுக்கு
ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவன் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார்.  உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து போனது. அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். எட்டு விதமாகத்
தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப் படுகிறார்கள். அவர்கள் ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர்,  சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் அறுபத்திநான்கு விதமான பைரவர்களையும் வணங்கி  வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.
அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு.

பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகா ஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப் போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும் போதும் பைரவ  பூஜை செய்வார்கள்.  சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள்,
நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர்.  திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல பெயர்கள்  பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால்  எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டம சனியாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை,  செவ்வந்தி, சந்தனம் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால்  நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.  அஷ்டமியன்று உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால்  சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத  வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது.

மன அமைதி இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி  நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. நாளை தேய்பிறை  அஷ்டமி நாள். துக்கங்களை மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை இன்று மேற்கொள்ளலாமே?
பைரவர் ஸ்லோகம்::
"""""'''""""""""""""""""""""""""
ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள் :சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின்  வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே,  அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம். தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்..